Tuesday, February 22, 2011

எங்க வீட்டு தக்காளியும், பக்கத்து வீட்டு கருவாடும்


வணக்கம்,

நலம் தானே? இத்தனை நாள் நிம்மதியா இருந்தமே, இப்போ எதுக்கு இந்த பக்கம் என்று தானே கேட்கிறிங்க? எல்லாம் நம்ம சஞ்சய்க்காக தான். பின்ன நண்பனுக்கு இதை கூட செய்யலைன்னா எப்படி?

இந்த பதிவின் மூலம் நான் சொல்லிக்க விரும்புவது என்ன என்றால்: மைக்ரோவேவில் சமைக்கிறேன் என டிமிக்கி குடுத்து கொண்டிருந்த சஞ்சய் போன ஞாயிறில் இருந்து முழு நேர சமையல்காரன் ஆகிவிட்டார். நண்பனுக்கு உதவும் விதமாக ஏதோ நம்மாலான சில பல உதவிகளை செய்து சஞ்சயை ஒரு பெரிய சமையல்காரன் என உலகமே புகழவைக்க வேண்டும்.

தலைப்பை பார்த்து விட்டு, இதென்ன பெரிய சமையல் என நினைச்சிங்க என்றால் அது தப்பு, பெரிய தப்பு. தேவையான பொருட்களில் தான் இந்த கறியின் சுவை உள்ளது. முதலில் அதைப் பார்ப்போம்.

மிக முக்கியமான தேவையான பொருட்கள்:

(1) அடம் பிடித்து, அப்பாவிடம் திட்டு வாங்கி வீட்டில் நீங்களே வைத்த தக்காளி செடியில் இருந்து வந்த தக்காளிக்காய்கள். (குறிப்பாக அந்த செடிக்கு நீங்கள் ஒரு தடவை கூட நீர் ஊற்றியிருக்க கூடாது. வைத்த சில நாட்களிலேயே வேலை என சொல்லி வேறு ஊரிற்கோ/ நாட்டிற்கோ சென்றுவிட வேண்டும்)

(2) பக்கத்து வீட்டில் கொடுத்த கருவாட்டு துண்டு (கருவாடு தரும் பக்கத்து வீட்டுக்காரரா என பொறாமை வேண்டாம்..அந்த பக்கத்து வீடு என் அண்ணன் வீடு) கருவாடு நிச்சயமாக ஊரில் இருந்து வந்திருக்க வேண்டும்.


வழமையான தேவையான பொருட்கள்:
* தக்காளிப்பழம் 1
* வெங்காயம் பெரியது 1
* உள்ளி 5 நீளவாக்கில் வெட்டியது
* கறிவேப்பிலை 10 இலைகள்
* மஞ்சள் தூள் 1/2 தே.க
* மல்லி தூள் 1/2 மே.க
* மிளகாய் தூள் 1/2 மே.க
* நீர் 1/2 கப்
* தேங்காய்ப்பால் / சோயாப்பால் 1/4 கப்
* உப்பு தேவைக்கேற்ப
* எண்ணெய் சிறிதளவு


செய்முறை:
1. சின்ன தக்காளி காய்களை பாதியாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். Background Sound: அம்மா "இனி இங்க ஆராவது மரம் வைக்கிறன் அது இது என்று சொல்லட்டும்"

2. வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அது போல தங்காளி பழங்களை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

3. அடுப்பை பற்ற வைத்து, சட்டியை அதில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி லேசாக சூடாக்க வேண்டும்.

4. சூடாக்கிய எண்ணெய்யில் வெங்காயத்தை போட்டு வதக்குங்கள், பின்னர் உள்ளி (வெள்ளைப்பூண்டு), கறிவேப்பிலை, வெட்டிய தக்காளிகாய்கள், கருவாடு போட்டு நன்றாக வதக்குங்கள்.

5. 3 நிமிடங்களில் மஞ்சள் தூளில் ஆரம்பித்து, மேற் கூறிய அத்தனை தூள்களையும் உப்பையும் சேர்த்து நன்றாக கிளறி 1/2 பேணி(கப்) நீர் சேர்த்து 3 நிமிடங்களுக்கு அவிய விடுங்கள். சட்டிக்கு மூடி மூடி என்று சொல்லி ஒன்று இருக்கும். அதை இப்போதாவது உபயோகிக்கலாமே. அதனால் மூடியால் மூடி அவியுங்கள்.

6. இப்போது பால் (தேங்காய்ப்பால் சுவைதான், கொழுப்பை குறைக்க விரும்புவோர் சோயாப்பால் சேர்க்கலாம்) சேர்த்து நன்றாக கொதித்து வந்ததும் இறக்கிவிடுங்கள். (அடுப்பில் இருந்து தான்)

7. கறி நிச்சயமாக சுவையாக இருக்கும், தக்காளி செடி வைத்ததற்கும், தண்ணீர் ஊற்றாமல் வேறு ஊருக்கு சென்றதற்கும் பேசியவர்களுக்கும் சாப்பிட குடுத்து சமாதானம் செய்துவிடுங்கள்.


பி.கு:
* செய்முறை 3: சஞ்சய் போன்ற புது சமையல்காரர்களுக்காக. கிகிகிகி.. சஞ்சய் யூ கட் த கருவாடு. ஓகே? ;)
* எனக்கு வாழ்த்து சொல்லவே மாட்டாளா என சஞ்சய் நினைக்கலாம், இந்த பதிவ விடவா ஒரு வாழ்த்து ;) கிகிகிகிகி நண்பேன்டா


சரி நான் கிளம்பட்டா, இந்த தடவை என்ன செடி வைக்கலாம்னு யோசிக்கணும்ல ;)

9 comments:

Jaleela Kamal said...

வாங்க தூயா எப்படி இருக்கீங்க.
கருவாட்டும் தக்காளியும் ஆகா மனம் ரொம்ப ஜோராக இருக்குமே

Jaleela Kamal said...

நாங்க இரங்கூன் மொச்சையும், காய் கருவாரு சேர்த்து செய்வோம், மனம் எட்டு வீட்டு கதவை தட்டும்

♥ தூயா ♥ Thooya ♥ said...

வணக்கம் ஜலீலா,
நலம். நீங்கள்?

இரங்கூன் மொச்சை?? எப்படியிருக்கும்?

அமைதிச்சாரல் said...

எப்படியிருக்கீங்க தூயா.. பார்த்து ரொம்ப நாளாச்சு.

வழக்கம்போலவே நகைச்சுவையுடன் கூடிய உங்க அறுசுவை டாப்பு :-)))

♥ தூயா ♥ Thooya ♥ said...

வணக்கம் அமைதிச்சாரல்,

நல்லாயிருக்கேன். நன்றி. நீங்க? அறுவை என்பதை அழகாக சொல்லிட்டிங்க..சரி சரி... ;) கிகிகி

asiya omar said...

இப்ப தான் உங்க ப்ளாக் வருகிறேனோ! சமையலும் விவரிப்பும் அருமை.

வந்தியத்தேவன் said...

வாம்மா மின்னல் நீண்ட நாட்களின் பின்னர் பங்குவின் பதிவு.

சுந்தரா said...

கருவாட்டுக்குழம்பும் தக்காளிக்காயின் கதையும் நல்லாருக்கு தூயா.

அம்பாளடியாள் said...

வணக்கம் நல்ல அருமையான சமையல் தகவல் நன்றி பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...